கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.

Aug 6, 2024 - 14:38
கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

நான் கரைவலை தொழில் செய்கின்றேன்.  கடலரிப்பு ஏற்பட்டுள்ளதனால் தொழில் செய்வது மிகவும் கஷ்டமாகவுள்ளது.  இக்கடற்கரை பூராகவும் கற்கள் இருப்பதனால் வலைகள் கற்களில் சிக்குப்பட்டு கிழிந்து விடுகின்றன.  சிலசமயங்களில் படகுகளையும் தள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எங்களுக்கு வேறு தொழில்கள் தெரியாததாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்று தனது கஷ்டங்களை விபரித்தார் 58 வயதான மு.சுந்தரலிங்கம். 

காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் படகொன்றும் உடைந்துள்ளது.  இதனைப் பற்றி யாருமே பார்ப்பதுமில்லை, கேட்பதுமில்லை, எங்களுக்கு உதவி செய்வதுமில்லை.  கடலரிப்பால் தென்னை மரங்கள், கிணறுகள்,  வாடிகள் அமைக்கப்பட்ட இடங்கள் கூட அழிந்து கொண்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் கடலரிப்பு.  இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் பெரிய பெரிய கற்களைக் போட்டு கடலரிப்பைத் தடுத்துத் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடலரிப்பு அண்மைக்காலமாக அம்பாறை கரையோரப் பிரதேசங்களை வெகுவாக பாதித்து வருகின்றது. இதனால் நேரடியாக மீனவர்களே பாதிக்கப்படுகின்றனர்.

இக்கடலரிப்பு வீதியைத் தொடுமளவுக்கு வந்துள்ளதால் வாடிகள், படகுகள், வலைகள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன.  மீனவர்கள் கடலுக்குச் சென்றால்தான் சாப்பிடலாம். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கெல்லாம் பணம்தான் தேவைப்படுகின்றன.  தற்போது இக்கடலரிப்பால் நாங்கள் தொழில் இல்லாமல் மாதக் கணக்கில் வீட்டிலிருக்கின்றோம்.  கடன்பட்டுத்தான் சாப்பிடுகின்றோம்.  இவ்வாறான நிலைமைகளின் போது அரசாங்கம் இம்மீனவ மக்களாகிய எங்களுக்கு நிவாரணத்தைத் தந்து உதவி செய்யவேண்டும். தொழில் இல்லாததால் வீட்டில் கணவன்-மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கடற்கரைக்கு அண்மையிலிருக்கின்ற எங்களுக்குத்தான் கடுமையான கஷ்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளன.”  என்று காரைதீவு சிவசக்தி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவி இராசையா தில்லையம்மா தெரிவிக்கின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் 13804 மீனவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. இக்குடும்பங்களின் பிரதான வருமானமாக கடற்றொழிலே காணப்படுகின்றது. 14895 பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

இம்மாவட்டத்தில் கல்முனை தொடக்கம் பாணாம வரைக்குமான கரையோரப்பிரதேசத்தில் பெண்கள் தமது கணவர்களுக்கு தொழில் ரீதியான பக்க ஒத்துழைப்புகளை வழங்குபவர்களாக இருப்பதாக இராசையா தில்லையம்மா கூறுகின்றார். கருவாடு காயவைத்தல், வலை பிண்ணுதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இந்த மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குடும்ப வருமாணத்தில் பல சிக்கல்களையும் பெண்களுக்கு பல சுமைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் இக்கடலரிப்பு வெகுவாக பாதித்துள்ளது.

இக்கடலோரம் எவ்வளவோ தூரத்திலிருந்தது.  தற்போது இதனால் கரைவலைத் தொழில், மாயவலைத் தொழில், சிறுபடகுத் தொழில்கள் இல்லாமல் போகின்றன. படகுகளை இழுப்பதற்கு இடமில்லை, மக்கள் வாழ முடியாது கஷ்டப்படுகின்றார்கள். நடைபாதைகள் கூட இல்லாமல் இருக்கின்றன என்று சாய்ந்தமருதைச் சேர்ந்த  பக்கீர் முகைதீன் ஆதம்பாவா தனது ஆதங்கத்தை கூறுகின்றார்.

 இவற்றை மக்களுக்கு ஏற்றவகையில் அரசாங்கம் மேன்மைபடுத்தித் தரவேண்டும். தற்போது கற்களைப் போட்டிருக்கின்றார்கள், அவற்றை நன்றாக உயர்த்தி செய்ய வேண்டும். ஒரு இடத்தில் கொஞ்சமும், இன்னுமொரு இடத்தில் கொஞ்சமுமாக செய்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை.  ஒரு இடத்தில் செய்ததை பூரணமாக முடிக்க வேண்டும் என்பதாக ஆதம்பாவா தனது விமர்சனங்களையும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 780 மெட்றிக் தொன் மீன் உற்பத்தி இடம்பெற்றுள்ளது. கடந்த 2024 ஜூன் வரைக்கும்  அம்பாறை மாவட்டத்தின் மீன் உற்பத்தி 6049 மெட்றிக் தொன்னாக காணப்படுவதாக  கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்டு

மீன் உற்பத்தி

2017

19977.92

2018

17806.34

2019

11498.065

2020

7995.431

2021

8955.759

2022

7344.505

2023

11919.361

2024. ஜூன்

6049

தகவல்: கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் - கல்முனை

நாட்டின் தேசிய மீன் உற்பத்தியில் கனிசமான பங்கை அம்பாறை மீனவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த கடலரிப்பானது அவர்களுடைய தொழில் நடவடிக்கை மற்றும் உடமைகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இக்கடலரிப்பால் சுடலையும் மண்ணரித்துள்ளது. இதனைத்தடுப்பதற்காகத்தான் கல்வேலியைப் போடச் சொல்கின்றோம். மழை காலத்தில் கடல் அலைகள் கூடுதலாக எழும்புவதால் இறந்தவர்களின் உடல்களும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன. சாதாரண காலத்திலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கற்களைப் போட்டு தடுத்துத் தரவேண்டும். இதற்கு கட்டாயம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக கூறுகிறார் சுந்தரம் தில்லையம்பலம்.

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தமிழ் மக்களின் சுடலையும் மாளிகைக்காடு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் மையவாடியும் இக்கடலரிப்பினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 11, 12ஆம் மாதங்களில் இப்பிரதேசத்தில் வடகீழ் பருவக்காற்று பெயர்சி மழைக்காலமாகும். இதன்போது கடல் அலைகள் அதிகரிப்பதுடன் கடற்றொழிலும் செய்ய முடியாத நிலையும் இங்கு காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் கரைவலை போன்ற பாரம்பரிய மீன்பிடித்தொழிலில் 196 வள்ளங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வள்ளத்திலும் 50க்கு மேற்பட்டவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் இந்த கடலரிப்பினால் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்நிலையில் இக்கடலரிப்பினால் நிந்தவூர் பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2018 இல் 710.22 மெட்ரிக் தொன் மீன் அறுவடை கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் அது 2023 இல் 279.885 மெட்ரிக் தொன்னாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரைவலை வாடிகள் 15, படகு வாடிகள் 10, கடைகள் 03 என கடலரிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் இது குறித்து அரசியல் வாதிகளிடம் சொன்னால் அவர்கள் அடுத்த கிழமை கற்களை போடுவதாக கூறி காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள் என அரசியல்வாதிகள் மீதான தனது குற்றச்சாட்டை முன்வைத்தார் M.S. நஜீமுதீன் . 

மீனவர்கள் வறுமையிலும், வேதனையிலும் எவ்விதமான வருமானமுமில்லாது பட்டினியால் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  இதனைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிவிட்டோம், எதுவும் நடந்தபாடில்லை.

மீனவர்களை அநாதரவாக விடாமல் மீன்பிடி அமைச்சு இதனைக் கவனத்திற் கொண்டு  அவசர அவசரமாக கடலரிப்பைத் தடுத்து மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக கூறினார் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தின் உப செயலாளர் M.S. நஜீமுதீன்.

இலங்கையின் தேசிய உற்பத்தியில் மீன்பிடி பிரதான பங்கு வகிக்கிறது. இதில் ஆண்,பெண் தொழிலாளர்கள் பல்வேறு பாத்திரங்களை வகித்து வருகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டதுடன் தற்போது கடலரிப்பினாலும் அம்பாறை மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் தொடர்சியாக முன்னெடுக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அம்பாறை மீனவர்களின் கோரிக்கையாகும்.

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, திருக்கோவில், பொத்துவில், உல்லை போன்ற பிரதேசங்கள்  கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.  அம்பாறை மாவட்டம் நாட்டின் புரதத் தேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் கணிசமான அளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக  கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் N.ஶ்ரீரஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது;

 இக்கடலரிப்பினால் பெரும்பாலும் படகுகளின் இறங்கு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய சில வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றும் கரைவலை மீனவர்களுக்குரிய மீன்பிடி இடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பாறைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் போன்றனவும் கரைவலைத் தொழிலை பெருமளவு பாதித்துள்ளது. மேலும் கரைவலை மீன்பிடி வாடிகள் மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்ற பொது கட்டிடங்கள்  என்பனவும் சிதைவடைந்துள்ளதுடன் படகுகளை நிறுத்துவதற்குரிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  மீனவர்களது மீன்களை இடம் மாற்றுதல் மற்றும் படகுகளுக்குரிய பொருட்களைக் கொண்டு செல்லல் போன்ற நடவடிக்கைகளுக்குரிய செலவுகள் அதிகரிப்பதுடன் மீன்களின் தரமும் பெருமளவு பாதிக்கப்படுகின்றது. இதனால் மீன்பிடிப்பதற்குரிய செலவுகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.  இதனால் கரைவலை மீன்பிடிகளின் அளவு தற்போது குறைவடைந்துள்ளது. 

கடலரிப்பைத் தடுப்பதற்கு கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாகத்தான் பூரணமாக பகுப்பாய்வுகள் மேற் கொள்ளப்பட்டு பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கடலரிப்பைத் தடுப்பதற்கு உதாரணமாக  வெவ்வேறு வகையான breakwater structures  நிர்மாணிக்கப்படலாம், இடங்களுக்கு ஏற்றமாதிரி, ஜம்போ வேக்கிடள், பியோ வேக்குகள், இடங்களுக்கு ஏற்றமாதிரி ப்ரொவுன் வேக்கிடல் போன்றன இருக்கின்றன.  இது தொடர்பான பூரணமான ஆய்வு கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாகத்தான் மேற் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடலரிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறும் இடத்து எமது திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்து மானிய அடிப்படையில் ஏதாவது செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட முடியுமா என்பது தொடர்பாக கவனத்தில் எடுத்துள்ளோம்.  எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் திணைக்களத்தினால் அவ்வாறான செயற்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கிழக்குமாகாண பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதானிடம் கடலரிப்புக்கான காரணம் என்ன என வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்;

2012 ஆம் ஆண்டு ஒலுவில் துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு இந்தக் கடலரிப்பின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 2014 – 2024 ஆகஸ்ட் வரை ஒலுவில் துறைமுகத்திலிருந்து கல்முனை வரைக்கும் 17 கி.மீ வரை இதன் தாக்கம் வியாபித்துள்ளது.

கடலரிப்பானது கடல்மட்டம் உயர்தல், சூராவளி போன்ற காரணங்களால் ஏற்படும். ஆனால் ஒலுவில் தொடக்கம் கல்முனை வரைக்குமான குறிப்பிட்ட இந்த பிதேசங்களில் கடலரிப்பு ஏற்படுவதற்கு  ஒலுவில் துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதுதான் காரணம். மண் (Sediment Transfer) ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கும். அந்த மண் நகர்வு  ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பிற்பாடு பாலமுனை பக்கமொன்றில் தடுக்கப்பட்டிருக்கிறது. 2021 காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகம் மூடப்பட்டிருப்பதால் அதனுடைய தாக்கம் முதல் ஏற்பட்டதை விட குறைந்துள்ளது. ஆனால் அதனுடைய harbur bay ஆழமாக தோண்டப்பட்டிருப்பதால் அதற்குள் கணிசமான அளவு மண் (Deposit) சேர்ந்து வருகிறது. எனினும் மண் (Supply) வழங்கப்படும் வீதம் குறைவாக இருப்பதால் தான் இந்தப் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது  என்று பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன் தெரிவித்தார்.

கடலரிப்பினால் கடற்கரையின் பாதிப்பு ஒவ்வொரு இடத்துக்கும் வித்தியாசப்படுகிறது. எனினும் 2012 – 2022 ஆண்டுகாலப்பகுதி வரையில் கிட்டத்தட்ட 200 மீட்டர் அளவில் கடல் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இக்கடலரிப்பினால் 400 தென்னை மரங்கள், இயற்கைத் தாவரங்கள் உட்பட மீன்பிடித்துறையின் வாடிகள் மிகவும் பாரதூரமாக  பாதிக்கப்பட்டிருக்கின்றன  என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கடலரிப்பைத் தடுப்பதற்காக தமது கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் டிசம்பர் 2023 வரை 175 மில்லியன் ரூபா பணம் செலவளிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன் தெரிவிக்கிறார் .

திட்டம்

திட்டப் பிரதேசம்

தொகை

Groyne Series (கற்களை கடலுக்கு செங்குத்தாக இடுதல்) – (175 மீட்டர்)

ஒலுவில்

31 மில்லியன்

Revetment – (150 மீட்டர்)

ஒலுவில்

5.4 மில்லியன்

அவசர தடுப்பு நடிவடிக்கை

ஒலுவில்

0.3 மில்லியன்

Revetment

ஒலுவில்

11.6 மில்லியன்

 3 Groyne Series

ஒலுவில்

15.3 மில்லியன்

 

Gabion Wall –(150 மீட்டர்)

நிந்தவூர்

2.1 மில்லியன்

அவசர தடுப்பு நடிவடிக்கை –(185 மீட்டர்)

நிந்தவூர்

1.3 மில்லியன்

Revetment

நிந்தவூர்

2.7 மில்லியன்

7 Groyne Series

நிந்தவூர்

60 மில்லியன்

Gabion Wall (150 மீட்டர்)

காரைதீவுமாளிகைக்காடு மையவாடி

13.1 மில்லியன்

8 Groyne Series – 1ம் கட்டம்

சாய்ந்தமருதுமாளிகைக்காடு

10.2 மில்லியன்

5 Groyne Series – 2ம் கட்டம்

சாய்ந்தமருதுமாளிகைக்காடு

28 மில்லியன்

 தகவல்: எம். துளசிதாசன், பிராந்திய பொறியியலாளர், கடலோர பாதுகாப்பு திணைக்களம், கிழக்குமாகாணம்

இதேவேளை சாய்ந்தமருது தொடக்கம் கல்முனைக்குடி கொடியேற்றப்பள்ளி வரை கடலரிப்பின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் 9 Groyne Series (கற்களை கடலுக்கு செங்குத்தாக இடுதல்) அமைக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்கு 52 மில்லியன் செலவிலான திட்டத்துக்கு விலைமனுக் கோரலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த செயற்பாடு முடிந்தவுடன் இன்னும் இரண்டு வாரத்துக்குள் அதற்கான வேலையையும் ஆரம்பிப்பதற்கு இருக்கிறோம்.

இதைத்தாண்டியும் பல திட்டங்கள் இருக்கின்றன. அவை செலவு கூடிய திட்டங்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு இந்த திட்டங்களைச் செய்து கொண்டு வருகின்றோம் என்று பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன் மேலும் தெரிவித்தார்.

எனினும் வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும் என்பது பழமொழியாகும். அது பழமொழி மட்டுமல்ல உண்மையுமாகும். மீனவர்கள் கடலரிப்பினால் தமது உடமைகளை இழந்துவருவதால் அவை அவர்களால் மீட்டெடுக்க முடியாத சுமைக்கு அவர்களை தள்ளிவிடுகின்றது. அவசரமாக கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தமது தொழில் ஸ்தளங்கள் பாதுகாக்கப்பட்டு மீன்பிடிக்கான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட வேண்டும் என்பதே அம்பாறை மாவட்ட மீனவர்களின் எதிர்பார்ப்பாகும்.  

. மொஹமட் பாயிஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.