தேர்தலுக்கு சவாலாகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.

Jul 18, 2024 - 15:58
தேர்தலுக்கு சவாலாகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

க.பிரசன்னா

இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு ஆதரவாகவும் ஏனையோருக்கு எதிராகவும் கருத்துக்களையும் விளம்பரங்களையும் செய்யும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தகவலின் துல்லியத்தன்மை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பாரிய தாக்கத்தை செலுத்தக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பல கட்சிகள் தங்களுடைய பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கட்சிகளுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் தவறான தகவல்கள், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை பரப்பும் நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு தேர்தல்களும் இவ்வாறான கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுவது வழமையென்றாலும் தற்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இவற்றை இன்னும் வலுப்படுத்துமென்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. எனவே தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பில் அதிகம் பேச வேண்டியுள்ளது.

19.06.2024 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் ஹேஷ்டேக் ஜெனரேஷன் உண்மை சரிபார்ப்பு முயற்சியை மேற்கொண்டிருந்தது. “அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதன்மை தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது!” என தலைப்பிட்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க லண்டனில் ஆற்றிய உரை தொடர்பான, திரிபுபடுத்தப்பட்ட செய்தியே இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.

இறுதியில் “அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதன்மை: தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது!” என தலைப்பிட்டு ஈழநாடு பத்திரிகை  அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த செய்தியின் தலைப்பு மற்றும் உள்ளடக்கங்கள் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாக உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டது.

இதேபோல பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து மே 27 அன்று சர்வஜன பலய என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. மௌபிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இவற்றில் உள்ளடங்கியுள்ளன. இந்த புதிய கூட்டணியின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இறுதியில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சர்வஜன பலய கூட்டணியின் ஆதரவை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது.

இவ்வாறு இனங்கள் மற்றும் வேட்பாளர்கள், கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளை தூண்டக்கூடிய அதிகளவான தகவல்கள் சமீபகாலங்களில் வெளிவருகின்றன. மறுபுறம் தேர்தல் தொடர்பான அதிகளவான ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளும் வெளிவருகின்றன. இதனால் தகவல்களின் துல்லியம் மற்றும் உண்மைத்தன்மை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கு இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யமுடியுமென்ற வலுவான சமிக்ஞையும் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இலங்கை மட்டுமல்லாது அமெரிக்கா, ரஷ்யா, தைவான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. முந்தைய தேர்தல்களைப் போலவே எதிர்வரும் தேர்தல்களிலும் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக தவறான தகவல்கள் இருக்குமென கருதப்படுகின்றது.

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலின் போது, தனது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறிய வீடியோ உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இம்ரான்கானின் கட்சி அவரின் குரலை பிரதிபலிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியது. இந்த முயற்சி தேர்தல் பரப்புரையின் அடுத்தகட்ட நகர்வா அல்லது ஆபத்தான போக்கா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் பல போலி செய்திகள், வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. முன்னதாக, பங்களாதேஷில் எதிர்கட்சியினரான ரூமின் பர்ஹானா நீச்சல் உடையில் இருப்பது போலவும், நிபுன் ராய் நீச்சல் குளத்தில் இருப்பது போலவும் டீப்பேக் வீடியோக்கள் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசுவது போல வாய்ஸ் குளோனிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒலிப்பதிவு ஒன்று வெளியானது. இவை அந்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வழக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது. வேட்பாளர்கள் என்ன பேசுகின்றனர், எங்கு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் என்பதை உடனடியாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரியப்படுத்தி பொதுமக்களின் கவனத்தை பெற முயற்சி செய்து வருகின்றனர். தன் கட்சியின் செயல்பாடுகளை வெளிப்படுத்தி தனக்கு சாதகமாகவும் எதிர் கட்சியினர் குறித்து மீம்ஸ், வீடியோ என உருவாக்கி வெளியிடுவதையும் காணமுடிகிறது. இந்த விளம்பரங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைந்து பிரபலமடைகின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பகிரும் தளமாக சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன. அதிகமான பாவனையாளர்கள் சமூக ஊடகங்களின் மூலம் செய்தி அணுகலை கொண்டிருப்பதால் இவற்றில் விரைவான தாக்கம் உணரப்படுகின்றது. களனி பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தால் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வில், 70 வீதமான இலங்கையர்கள் சமூக ஊடகங்களின் மூலமே செய்தி மூலங்களை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும் இணையும் போது தேர்தல் காலங்களில் சரியான தகவல்களை அறிவது சவாலான விடயமாக இருக்குமென கூறப்படுகின்றது.

இலங்கையில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பு நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது இவற்றின் தாக்கத்தை உணர முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தவறான தகவல்களின் அளவை ஆயிரக்கணக்கான மடங்கு பெரிதாக்க முடியும். மிக யதார்த்தமான ஆழமான போலியான படங்கள், ஒலிப்பதிவு அல்லது வீடியோ வாக்காளர்களை உண்மைச் சரிபார்ப்புக்கு முன் சக்திவாய்ந்த முறையில் பாதிக்கலாம். சமூக ஊடக தளங்களால் இதன் தாக்கம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் தேர்தல் காலங்களில் இதன் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.

எனவே தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை விரைந்து அடையாளம் காண்பது அவசியம். அவை தொழில்நுட்ப ரீதியாக மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்படலாம். மக்கள் தேர்தல் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ள தேர்தல்கள் திணைக்களம், தேர்தல் கண்காணிப்பு முகவர்கள் மற்றும் உண்மை சரிபார்ப்பு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம். ஜனநாயக தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அவர்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது அவசியமாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.