37 வயதில் சிக்கந்தர் ராஸா அதிவேக சதம்...  இலங்கைக்கு வில்லனாகும் ஜிம்பாப்வே!

ஒரு குட்டி உலகக்கோப்பை போன்று நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது. 

Jun 21, 2023 - 06:57
37 வயதில் சிக்கந்தர் ராஸா அதிவேக சதம்...  இலங்கைக்கு வில்லனாகும் ஜிம்பாப்வே!

உலகக்கோப்பை கிரிக்கெட்

2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

மொத்தம் 10 அணிகள் பங்குபெற்று மோதவுள்ள இந்த தொடரில், 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

அந்த வகையில் “இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இந்நிலையில் அடுத்த 2 இடங்களுக்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளானது ஜிம்பாப்வேவில் நடைபெற்றுவருகிறது. 

அதில் ‘இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஓமன், யு.ஏ.இ., அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நேபாளம்’ முதலிய 10 அணிகள் மோதி வருகின்றன. 

ஜுன் 18ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகளானது ஜூலை 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

ஒரு குட்டி உலகக்கோப்பை போன்று நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது. 

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஜிம்பாப்வே அணி இதை பயன்படுத்தி இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் முனைப்பில் ஆடிவருகிறது.

சிக்கந்தர் ராசா அதிவேக சதம்

முதல் போட்டியில் இரண்டு ஜிம்பாப்வே வீரர்கள் சதமடித்து அசத்திய நிலையில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அந்த அணி. 

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து நேற்று விளையாடியது ஜிம்பாப்வே அணி. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் மற்றும் கேப்டன் எட்வர்ட்ஸ் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 315 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் 316 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராசாவின் அதிரடியான ஆட்டத்தால், 40.5 ஓவரிலேயே 319 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. 

8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என துவம்சம் செய்த சிக்கந்தர் ராசா 54 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 37 வயதாகும் சிக்கந்தர் ராசா ஒருநாள் வரலாற்றில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார்.

வில்லனாக மாறும் ஜிம்பாப்வே!

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வெற்றிபெற்று 2 அணிகளே உலகக்கோப்பை தொடரில் நுழையும் என்பதால், சொந்த மண்ணை பயன்படுத்தி ஜிம்பாப்வேவின் மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். 

36 வயதான சீன் வில்லியம்ஸ் சதமடித்த நிலையில், 37 வயதாகும் சிக்கந்தர் ராசா மற்றும் கேப்டன் க்ரைக் எர்வைன் இருவரும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஒருவேளை ஜிம்பாப்வே சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துவிடும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.